பொருட்கள் வாங்குவதற்காக புதுக்கோட்டை நகரில் குவிந்த பொதுமக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக புதுக்கோட்டை நகரில் பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2019-10-26 22:30 GMT
புதுக்கோட்டை,

தீபாவளி பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தீபாவளிக்கு தேவையான பட்டாசு, புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக புதுக்கோட்டை நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் புதுக்கோட்டை நகரில் காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக கீழராஜவீதி, பிருந்தாவனம் முக்கம், மேலராஜவீதி, நெல்லுமண்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் மர்மநபர்கள் சிலர் இந்த கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதேபோல கீழராஜவீதி மற்றும் அண்ணாசிலை உள்ளிட்ட 3 இடங்களில் போலீசார் உயர்கோபுரங்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகரின் முக்கிய கடைவீதிகளில் மாவட்ட போலீசார் சார்பில் 32 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

குவிந்த பொதுமக்கள்

தீபாவளிக்கு முந்தைய நாள் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக புதுக்கோட்டை நகரில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் புதுக்கோட்டை அண்ணாசிலையில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை சாலையோர தரைக்கடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் சின்னப்பா பூங்காவில் இருந்து அண்ணாசிலை வரையும் அதிக அளவில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.இதனால் நகரின் முக்கிய கடைவீதிகளான கீழராஜவீதி, நெல்லுமண்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்பட எந்தஒரு வாகனங்களையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே நின்று கொண்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.

மேலும் செய்திகள்