குடியாத்தத்தில் சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி - போலீசில் புகார்

குடியாத்தத்தில் சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தவர் மீது போலீசில் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-10-28 22:15 GMT
குடியாத்தம், 

குடியாத்தம் தரணம்பேட்டை ஜானுமியான் தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் (வயது 35). இவர் மாதச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரூ.5 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம் என சீட்டு கட்டி வந்துள்ளனர். மேலும் பொதுமக்களிடம் இருந்து ரிஸ்வான் பணம் பெற்று அதற்கு வட்டி கொடுத்து வந்துள்ளார்.

சீட்டு முதிர்ச்சி அடைந்தும் பல பேருக்கு பணம் தராமல் ரிஸ்வான் காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி ரிஸ்வான் தலைமறைவாகி விட்டார். இதனால் பொதுமக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று குடியாத்தம் டவுன் போலீசில் கொடுத்தனர். அதில் ரிஸ்வான் சீட்டு பணம் வசூலித்து லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதால் இதுகுறித்து வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க பொதுமக்களிடம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கூறினார். இதையடுத்து அவர்கள் வேலூரில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க சென்றனர்.

மேலும் செய்திகள்