தீபாவளி விடுமுறை முடிந்து ஊர் திரும்பினர்: பஸ்-ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது

தீபாவளி விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய பயணிகளால் கரூர் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது.

Update: 2019-10-28 22:45 GMT
கரூர்,

கரூரில் ஜவுளி, கொசுவலை, பஸ்பாடி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதேபோல இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியில் உள்ளவர்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

அவர்கள் பண்டிகை கொண்டாடி விட்டு நேற்று கரூர் திரும்பினர். இதேபோல, வெளி மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் தங்களது நிறுவனங்களுக்கு செல்ல ஆயத்தமானார்கள். இதற்காக கரூரில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், பஸ், ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ரெயில் நிலையம் வந்த ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறிய பயணிகள் இடம் இல்லாததால் தரையில் அமர்ந்து பயணம் செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கரூர் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடைமேடைகளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்தவகையில் ரெயிலில் பட்டாசு கொண்டு வந்த சிலருக்கு அபராதம் விதித்தனர். பஸ் நிலையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்