பெங்களூருவில் தம்பதி கொலை வழக்கில் கார் டிரைவர் மனைவியுடன் கைது நகை, பணத்துக்காக திட்டமிட்டு கொன்றனர்; திடுக்கிடும் தகவல்கள்

பெங்களூருவில் தம்பதி கொலை வழக்கில் கார் டிரைவர் மனைவியுடன் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு திட்டமிட்டு கொலை செய்தது உள்பட திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்து உள்ளது.

Update: 2019-10-28 22:15 GMT
பெங்களூரு,

பெங்களூரு கருடாச்சார்பாளையாவில் உள்ள ஆர்.எச்.பி. காலனியில் வசித்து வந்தவர் சந்திரகவுடா (வயது 63). இவருடைய மனைவி லட்சுமம்மா (55). இவர்களது சொந்த ஊர், மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை ஆகும். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இவர்கள் தத்தெடுத்து வளர்த்த மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவர் தனது கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார்.

இதனால் சந்திரகவுடா-லட்சுமம்மா தம்பதி மட்டும் அந்த வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி சந்திரகவுடா, லட்சுமம்மா ஆகியோர் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். வீட்டில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதுபற்றி மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு அம்ருதஹள்ளியில் வசித்து வரும் வெங்கடேசலு (வயது 30), அவருடைய மனைவி அர்பிதா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கைதான வெங்கடேசலு மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா சடகட்டா கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு அர்பிதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1½ வயது குழந்தை உள்ளது. வெங்கடேசலு தனது குடும்பத்துடன் பெங்களூரு அம்ருதஹள்ளியில் வசித்து வருகிறார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள வெங்கடேசலு கார் ஓட்டி வருகிறார்.

வெங்கடேசலு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் அவர் கொள்ளையடிக்க முடிவு செய்தார். அதன்படி அவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக பார்த்து வந்தார். இதன்மூலம் குழந்தைகள் இல்லாத தம்பதியை கொன்று நகை-பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தார்.

இதுபற்றி அவர் தனது மனைவி அர்பிதாவிடம் கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் இல்லாத தம்பதியை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்தால் குற்றவாளிகளை கைது செய்ய போலீசாருக்கு அழுத்தம் கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள். இதனால் எளிதில் தப்பித்து விடலாம். மேலும் வேகமாக பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை நடத்தலாம் என்று அவர் கூறியுள்ளார். இதை கேட்ட அர்பிதாவும், கொலை, கொள்ளையில் ஈடுபட சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த ஒரு திருமண விழாவில் சந்திரகவுடா-லட்சுமம்மா தம்பதியை வெங்கடேசலு-அர்பிதா தம்பதி பார்த்துள்ளனர். அப்போது லட்சுமம்மா அதிகளவில் நகைகள் அணிந்திருந்தார். மேலும் சந்திரகவுடா-லட்சுமம்மா தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததையும் வெங்கடேசலு அறிந்தார். இதையடுத்து அவரும், அவரது மனைவி அர்பிதாவும் சந்திரகவுடா-லட்சுமம்மா தம்பதியிடம் நெருங்கி பழகினர்.

அதன்பிறகு 2 முறை வெங்கடேசலு-அர்பிதா தம்பதி, சந்திரகவுடா-லட்சுமம்மாவின் வீட்டுக்கு வந்து நலம் விசாரிப்பது போன்று நகைகள், பணம் இருக்கும் இடங்களை பார்த்து சென்றனர். கடந்த 16-ந் தேதி மாலையில் அவர்கள் 2 பேரும் தாங்கள் வந்த காரை வெங்கடேசலு-லட்சுமம்மாவின் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் விட்டுவிட்டு அவர்களின் வீட்டுக்கு சென்றனர்.

வெங்கடேசலு வீட்டின் உள்ளே செல்ல, அவருடைய மனைவி அர்பிதா தனது குழந்தையை வைத்து கொண்டு வீட்டுக்கு வெளியே நின்று யாரும் வருகிறார்களோ? என்று பார்த்தபடி இருந்துள்ளார். இந்த வேளையில் சந்திரகவுடா தனது வீட்டு அருகே நடைப்பயிற்சிக்கு சென்றதால் லட்சுமம்மா மட்டும் வீட்டில் இருந்தார். இதையடுத்து வெங்கடேசலு, லட்சுமம்மாவின் தலையில் ஆயுதத்தால்(வீல் ஸ்டன்னர்) தாக்கி கொலை செய்தார். இதற்கிடையே, நடைபயிற்சியை முடித்துவிட்டு சந்திரகவுடா வீட்டுக்கு நடந்து வந்துள்ளார்.

வீட்டுக்கு வெளியே அர்பிதா நிற்பதை பார்த்து அவர் நலம் விசாரித்தார். கையில் வைத்திருந்த குழந்தை அழுததால், குழந்தையை வாங்கிய சந்திரகவுடா அருகே உள்ள கடைக்கு சென்று பிஸ்கெட் வாங்கி கொடுத்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே கதவின் பின்புறம் மறைந்து நின்ற வெங்கடேசலு, சந்திரகவுடாவையும் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தார். இதையடுத்து வெங்கடேசலு-அர்பிதா தம்பதி வீட்டில் இருந்த 305 கிராம் தங்க நகைகள், ரூ.9,500 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அவர்கள் மல்லேசுவரத்தில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்து ரூ.8.67 லட்சம் வாங்கினர். இந்த பணத்தை எடுத்து கொண்டு அவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம் வித்தமஞ்சல் கிராமத்தில் உள்ள நண்பரின் வீட்டில் சென்று தங்கியபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.

மேலும் கொள்ளைப்போன 305 கிராம் தங்க நகைகள், ரூ.6.04 லட்சம் ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன.

மேலும் கைதான வெங்கடேசலு- அர்பிதா தம்பதிக்கு இன்னொரு கொலையிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதாவது கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா ராயசமுத்திரா கிராமத்தில் வசித்து வந்த குழந்தையில்லா தம்பதி லலிதம்மா-குண்டேகவுடா தம்பதியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அவர்கள் வீட்டில் இருந்த 60 கிராம் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்