கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை, சூறைக்காற்றால் முந்திரி, பலா மரங்கள் வேரோடு சாய்ந்தன

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முந்திரி, பலா உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

Update: 2019-10-28 22:15 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மழை இல்லை. இதனால் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை சிரமம் இன்றி கொண்டாடினர். இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று அதிகாலை முதல் கடலூரில் மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் கன மழையாக பெய்தது. காலை 8 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை 30 நிமிடம் நீடித்தது. அதன்பிறகு வெயில் அடிக்க தொடங்கியது. பின்னர் காலை 11 மணி அளவில் மீண்டும் மழை பெய்தது. இந்த மழை சுமார் 15 நிமிடம் நீடித்தது. அதன்பிறகு மழை இல்லை.

இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் அதிக அளவு தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சுரங்கப்பாதையை கடந்து சென்றனர். அதன் பிறகு மோட்டார் மூலம் இறைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதேபோல் விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் போன்ற பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் கருவேப்பிலங்குறிச்சி அடுத்த பெலாந்துறை, கணபதிகுறிச்சி, பாசிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அப்பகுதியில் இருந்த முந்திரி, பலா, தேக்கு போன்ற மரங்களும், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்கமுடியாமல் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குப்பநத்தத்தில் 27.40 மில்லி மீட்டர் மழை பெய்தது

மேலும் செய்திகள்