குலசேகரம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்; கொத்தனார் உள்பட 3 பேர் கைது

குலசேகரம் அருகே ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்திய கொத்தனார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-28 22:15 GMT
பத்மநாபபுரம்,

குலசேகரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் கல்லூரிக்கு சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் மாணவியை தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் மாயமான மாணவியை கண்டு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தம்பதி கைது

அந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி சித்திரங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் அடிக்கடி செல்போனில் பேசியது தெரிய வந்தது. அந்த வாலிபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, அவர், மதுரையை சேர்ந்த ஒருவருடன் பேசியது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே, போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் வேலாயுதமூர்த்தி(வயது 27) என்பதும், மாணவியை கடத்தி வந்த வாலிபருக்கு அடைக்கலம் கொடுத்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வாலிபருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக வேலாயுதமூர்த்தி மற்றும் அவருடைய மனைவி கல்பனா(23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தி வந்த வாலிபர் கோவையில் தங்கி இருப்பதாக கூறினார்கள்.

மருத்துவ பரிசோதனை

அதைத்தொடர்ந்து தனிப்படையினர் கோவைக்கு சென்று, ஒரு வீட்டில் மாணவியுடன் தங்கி இருந்த வாலிபரை பிடித்தனர். பின்னர் அவர் களை தக்கலைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் பெயர் ஷாபு(27), கொத்தனார் வேலை செய்வதும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்தியதும், மேலும் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து ஷாபுவை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்