தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் சைக்கிளில் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

Update: 2019-10-28 22:15 GMT
மதுரை,

மதுரையில் நாளை(புதன் கிழமை) தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதால் மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தேவர் ஜெயந்தியையொட்டி நாளை லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் நுழைய தடை செய்யப்படுகிறது. மேலும் விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை.

நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு ஆகிய பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பெரியார் சிலையில் திரும்பி மாற்று பாதையாக ராஜாமுத்தையா மன்றம், கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு, பி.டி.ஆர்.பாலம், காமராஜர் சாலை வழியாக செல்ல வேண்டும். மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு பகுதியில் இருந்து நத்தம், அழகர்கோவில் ரோட்டிற்கு வரும் வாகனங்கள் ராஜாமுத்தையா மன்றம், இளைஞர் விடுதி, ரேஸ்கோர்ஸ் சாலை, தாமரைத்தொட்டி, புதுநத்தம் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

வடக்கு வெளிவீதியில் இருந்து யானைக்கல், புதுப்பாலம் வரும் வாகனங்கள் பாலம் ஸ்டேசன் ரோடு, எம்.எம்.லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, இ2.இ2 சாலை வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல் ரோடு-செல்லூர் தத்தனேரி பகுதியில் இருந்து அழகர்கோவில் ரோடு, நத்தம் ரோடு செல்லும் வாகனங்கள் குலமங்கலம் ரோடு, பாலம் ஸ்டேசன் ரோடு சந்திப்பில் திரும்பி குலமங்கலம் ரோடு வழியாக சென்று மாற்று பாதைகளில் செல்ல வேண்டும். மேலமடை பகுதியில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி நகருக்குள் வரும் வாகனங்கள் ஆவின் சந்திப்பில் இருந்து குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.

தேவர் ஜெயந்தி விழாவிற்காக நகருக்குள் செல்ல போலீஸ் துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர பசும்பொன் செல்லும் இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாக செல்ல வேண்டும். மேலும் ஜெயந்தி விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் வருவோர் இருவர் மட்டுமே தலைக்கவசத்துடன் பயணிக்கவும், நான்கு சக்கர வாகனத்தில் வருவோர் அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் இருக்கை கச்சை அணிந்து பயணிக்க வேண்டும்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து மாற்றுப்பாதைகளை பயன்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்