பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை

பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2019-10-29 22:30 GMT
ஈரோடு,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் திறந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையான சுஜித் வில்சன் பரிதாபமாக உயிரிழந்தான். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டங்கள் மற்றும் நிலங்கள், அரசுக்கு சொந்தமான இடங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள் ஆகிய பகுதிகளில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். தனியார் நிலங்களில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளியில் உள்ள தூர்ந்துபோன கிணறுகளை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் போர்க்கால அடிப்படையில் மூட வேண்டும். தனியாரால் நிறுவப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு போலீசார் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் பாதுகாப்பான முறையில் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு பொறுப்பான அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆகியோர் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி மூடப்படாமல் இருக்கும் பயனற்ற ஆபத்தான ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி தூர்ந்துபோன கிணறுகளை கண்டறிந்து மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள பயனற்ற கிணறுகள் இருப்பதை கண்டறிந்தால் 1077 மற்றும் 0424-2260211 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறிஉள்ளார்.

மேலும் செய்திகள்