திருவாரூரில் கன மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூரில் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2019-10-29 23:00 GMT
திருவாரூர்,

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி திருவாரூரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. மழையினால் அனைத்து பணிகளும் தேக்கம் அடைந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம்

இதேபோல நீடாமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நீடாமங்கலம் பகுதியில் நேற்று கன மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. குருப்பெயர்ச்சிக்காக ஆலங்குடிக்கு வந்திருந்த பக்தர்கள் சிரமப்பட்டனர்.

கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம், அரிச்சந்திரபுரம், வேளுக்குடி, சித்தனங்குடி, பாரதிமூலங்குடி, பூந்தாழங்குடி, கார்நாதன்கோவில், மரக்கடை, பொதக்குடி, வக்ராநல்லூர், பாண்டுகுடி, திருராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நனைந்து கொண்டே வீடு திரும்பினர்.

மழை அளவு

நேற்று முன்தினம் காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- திருவாரூர்-71, வலங்கைமான்-58, குடவாசல்-46, நன்னிலம்-43, மன்னார்குடி-39, நீடாமங்கலம் -27, பாண்டவையாறு தலைப்பு-18, முத்துப்பேட்டை-10, திருத்துறைப்பூண்டி-6 என மாவட்டம் முழுவதும் சராசரியாக 35 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்