தூத்துக்குடியில் 5-வது நாளாக அரசு டாக்டர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5-வது நாளாக அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-29 22:45 GMT
தூத்துக்குடி,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர் களுக்கு காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களை கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும். அரசு டாக்டர் களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், கட்டாய பணி மாற்றம் கொடுக்கப்பட்ட டாக்டர் களை, அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆஸ்பத்திரிகளிலேயே பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டாக்டர்கள் ஏற்கனவே தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 5-வது நாளாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து சில டாக்டர்கள் மட்டும் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். அதே நேரத்தில் பெரும்பாலான டாக்டர்கள் பணிக்கு சென்றதால், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இன்றும்(புதன்கிழமை), நாளையும் அவசர சிகிச்சை பிரிவு, டெங்கு காய்ச்சல் பிரிவு தவிர அனைத்து சிகிச்சை பிரிவுகளிலும் டாக்டர்கள் முழுமையான பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்