தேவர் ஜெயந்தி: மதுரையில் அணையா ஜோதி பேரணியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தேவர் ஜெயந்தியையொட்டி மதுரையில் அணையா ஜோதி பிரசார பேரணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பசும்பொன்னில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அந்த ஜோதியை பெற்றுக் கொள்கிறார்.

Update: 2019-10-29 23:00 GMT
மதுரை, 

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு கார் மூலம் மதுரை வந்தார். அவருக்கு ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரை மாவட்டம் தனிச்சியம் பிரிவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான பெண்கள் பூரண கும்பம் மற்றும் முளைப்பாரியுடன் முதல்-அமைச்சரை வரவேற்றனர்.

அதை தொடர்ந்து ஜெயலலிதா பேரவையின் சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அணையா ஜோதியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். பின்னர் அவரிடம் அந்த ஜோதியை அமைச்சர் உதயகுமார் பெற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து ஜோதி ஓட்டம் மதுரையில் இருந்து பசும்பொன் கிராமத்திற்கு புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், நீதிபதி, பெரியபுள்ளான், அ.தி.மு.க. நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சாலைமுத்து, ஐ.பி.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் சரவணன் எம்.எல்.ஏ., தமிழரசன், வெற்றிவேல், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்பட பலர் ஜோதியை கையில் ஏந்தி கொண்டு தொடர் ஓட்டமாக சென்றனர். அப்போது தமிழக அரசின் சாதனை திட்டங்களான குடிமராமத்து திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை மக்களிடத்தில் எடுத்து கூறியபடி சென்றார்கள்.

இந்த பிரசார ஜோதியை பசும்பொன் கிராமத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று வழங்கி நிறைவு செய்கிறார்கள்.

இதற்கிடையே மதுரை அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்றனர். இதில் அ.தி.மு.க. மாநகர பொருளாளர் ராஜா, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று காலை 7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பசும்பொன்னுக்கு புறப்பட்டு செல்கிறார்.

மேலும் செய்திகள்