கோவை மாநகர பகுதியில், பயன்படாமல் திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகள் - உடனடியாக மூடக்கோரிக்கை

கோவை மாநகர பகுதியில் பயன்படாமல் திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-10-29 22:15 GMT
கோவை,

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவத்தையொட்டி கோவை மாநகர பகுதி மற்றும் புறநகர் பகுதியில் திறந்தநிலையில் கிடக்கும் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்றும், மூடாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் மற்றும் மாநகராட்சி தனி அதிகாரி ஆகியோர் அறிவித்தனர்.

ஆனால் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பல இடங்களில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் திறந்த நிலையில் கிடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. குறிப்பாக கோவை மாநகர் பகுதியில் உள்ள சிவானந்தபுரம் எல்.ஜி.பி. நகர், புத்தர் வீதியில் மாநகராட்சி சார்பில் போடப்பட்ட ஆழ்துளை கிணறு தற்போது பயன்பாடு இல்லாமல் இருப்பதுடன் திறந்து கிடக்கிறது. அதுபோன்று சில இடங்களில் உபயோகமற்ற கிணறுகளும் சுற்றுச்சுவர் உடைந்து தகர்ந்த நிலையில் ஆபத்தான முறையில்தான் இருக்கிறது.

இது குறித்து கோவையை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உபயோகமற்ற கிணறுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டது. அதில் உபயோகம் இல்லாத கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் தண்ணீர் இருந்தால் அந்த கிணற்றின் அருகே யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பல இடங்களில் கிணறுகள் பாதுகாப்பு இல்லாத நிலையில்தான் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளே பாதுகாப்பு இல்லாத நிலையில்தான் இருக்கிறது. எல்.ஜி.பி. நகர் புத்தர் வீதியில் கடந்த 3 ஆண்டுகள் வரை ஆழ்துளை கிணறு பயன்பாட்டில்தான் இருந்தது. அங்கிருந்துதான் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால் திடீரென்று மோட்டார் பழுதானதால் அது அப்படியே விடப்பட்டது.

தற்போது அந்த ஆழ்துளை கிணற்றின் மீது செங்கல் மட்டுமே வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதியில் சாலையின் மிக ஓரத்தில் இருக்கும் அந்த ஆழ்துளை கிணற்றால் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடிய வகையில்தான் இருக்கிறது. தற்போது குழந்தை சுஜித் இறந்ததால், உபயோகம் இல்லாத ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே விபரீதம் ஏதும் நிகழும் முன்பே அதனை உடனடியாக மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதவிர மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் கிணறுகள் பாதுகாப்பான முறையில் இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்