ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-30 23:00 GMT
ஈரோடு,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு டாக்டர்களுக்கு வழங்க வேண்டும். டாக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் 2 நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் உயர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அந்த சங்கத்தினர் நேற்று நடக்க இருந்த போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டனர்.

இந்த நிலையில் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

இதில், அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கூடிய அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி டாக்டர்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. கிராமப்புறங்களில் மருத்துவ சேவையாற்றும் டாக்டர்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்பிலும், சிறப்பு ஆஸ்பத்திரியில் பணியாற்றவும், படிக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் அரசு டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்