கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கனமழை: 25 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து அடியோடு பாதிப்பு

கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கன மழையால் 25 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர்.

Update: 2019-10-30 23:00 GMT
கொடைக்கானல்,

கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று வரை கன மழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங் கள் வேரோடு சாய்ந்து மலைப்பாதையில் விழுந்தன. இதனால் அப்சர்வேட்டரி ரோடு, வில்பட்டி ரோடு, கூக்கால் ரோடு, அடுக்கம் ரோடு, பூலத்தூர் பிரிவு ஆகிய இடங்களில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.

முக்கிய சுற்றுலா இடங்களில் நீண்ட வரிசையில் வாகனங் கள் காத்திருந்தன. பின்னர் நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அவர் களுடன் வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் சேர்ந்து மரங்களை வெட்டி அகற்றினர்.

அப்சர்வேட்டரி சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் 2 மின்கம்பங்கள், ஒரு வீடு சேதமடைந்தன. மேலும் மின்சார கம்பிகளும் அறுந்து விழுந்ததால் நகரின் பல்வேறு இடங் களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கின. தகவலறிந்த மின்சாரத்துறையினர் சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொண்டனர். கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர். கனமழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் கொடைக்கானலில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே இருந்தது. இதற்கிடையே நேற்று மாலை வில்பட்டி ரோடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. அத்துடன் நகரில் உள்ள லாஸ்காட்ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த மின்சார கம்பம் சேதமடைந்தது. தொடர்மழை காரணமாக கொடைக் கானலில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் மலைப்பாதையில் அடர்ந்த மேகமூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதற்கிடையே மண்சரிவு ஏற்பட்ட வில்பட்டி பகுதிக்கு ஆர்.டி.ஓ. சுரேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக் காடு, மங்களம்கொம்பு, தடியன்குடிசை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லாவெளி, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக சித்தரேவு-பெரும்பாறை மலைப்பாதையில் 5 இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி கொடைக்கானல் போட் கிளப்பில் 99 மீ.மீட்டர் மழையும், அப்சர்வேட்டரியில் 80 மி.மீட்டர் மழையும் பதிவானது.

மேலும் செய்திகள்