ஏனாம் கலவரம்: போலீஸ் நிலையத்தை சூறையாடிய வழக்கில் 46 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை - புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் நடந்த கலவரத்தில் போலீஸ் நிலையத்தை சூறையாடிய வழக்கில் 46 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2019-10-30 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் ரீஜினல் செராமிக் தொழிற்சாலை இயங்கி வந்தது. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த 27.1.2012 அன்று பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம், பி.எப். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது நிர்வாகத்தினருக்கும், தொழிலாளர் களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதையடுத்து தொழிலாளர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதுதொடர்பாக தொழிற்சங்க தலைவர் முரளி மோகனை போலீசார் கைது செய்து ஏனாம் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்தவுடன் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் புகுந்து சூறையாடினார்கள். இந்த சம்பவத்தில் தொழிற்சாலை துணைத் தலைவர் சந்திரசேகரன் படுகொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து ஏனாம் போலீஸ் நிலையமும் சூறையாடப்பட்டது. அரசு வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் ஏனாமில் கலவரம் வெடித்தது.

இதுதொடர்பாக ஏனாம் போலீசார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது தொடர்பாக 84 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

ஏனாம் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்ட வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி தாமோதரன் முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட 84 பேரில் 46 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 38 பேரை விடுதலை செய்தும் நீதிபதி தாமோதரன் தீர்ப்பு வழங்கினார்.

மேலும் செய்திகள்