நெமிலி அருகே, மழையால் அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது - கலெக்டர் நேரில் ஆய்வு

நெமிலி அருகே மழையால் இடிந்து விழுந்த கொல்லுமேடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-10-30 22:30 GMT
பனப்பாக்கம், 

வேலூர் மாவட்டம் நெமிலி ஒன்றியம் எலத்தூர் கிராமம் கொல்லுமேடு பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ-மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியை தனலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். மிகவும் பழமையான பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு, சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலையும் மழை பெய்தது. அதன்காரணமாக மாவட்ட நிர்வாகம் 2-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது.

அதனால் கொல்லுமேடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. எலத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் காலை 10 மணியளவில் கொல்லுமேடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

விடுமுறை காரணமாக பள்ளியில் யாரும் இல்லாததால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. இதுகுறித்து எலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பூபாலன் உடனடியாக நெமிலி தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மழையால் இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பள்ளி கட்டிடத்தை முழுவதும் இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கும் படியும், புதிய பள்ளி கட்டிடம் கட்டும்வரை பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து தற்காலிகமாக அங்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் படியும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், நெமிலி தாசில்தார் சதீஷ், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் புண்ணியகோட்டி, நெமிலி வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயராஜி, சம்பத்குமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்