மீட்பு குழுக்கள் இதுவரை அமைக்கப்படவில்லை - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் மீட்பு குழுக்கள் இதுவரை அமைக்கப்படவில்லை என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.

Update: 2019-10-30 23:15 GMT
புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சுஜித் மரணம் அடைந்ததில் அரசியல் லாபத்துக்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அங்கேயே இருந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பாராட்டி உள்ளனர்.

புதுவையில் மழை தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் 3 மணி நேரம் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி, தொடர் மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார். உண்மையில் மழையை எதிர்கொள்ள மின்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளை இணைத்து மீட்பு குழுக்கள் கூட இதுவரை அமைக்கப்படவில்லை.

வீடு, மரங்கள் விழுந்தால் அதை அப்புறப்படுத்த போதிய உபகரணங்கள் அரசுத்துறைகளிடம் இல்லை. எனது தொகுதியில் அம்பேத்கர் சாலையில் மாலை 6 மணி அளவில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை நான் மின்துறைக்கு தெரிவித்ததும், அதன் அதிகாரிகள் உபகரணங்கள் இன்றி வந்தனர்.

தீயணைப்பு துறையிடம் தகவல் தெரிவித்தபோது அண்ணா சாலையில் பணியில் இருப்பதாகவும், அது முடிந்து வருவதாகவும் தெரிவித்தனர். இரவு 10 மணிக்கு மரம் வெட்டி அகற்றப்பட்டு அதன்பின்னரே மின்சாரம் வழங்கப்பட்டது. ஒரு மரம் விழுந்ததற்கே 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மழையை எதிர்கொள்ள தயார் என்று முதல்-அமைச்சர் கூறியது ஒருநாள் செய்திக்காகத்தானா?

கடந்த 8 மாதத்துக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் கூட இப்போது குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு நிர்வாகத்தில் அதிகாரிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்ட நிலையில் மக்கள் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்காத அதிகாரிகள் மீது முதல்-அமைச்சர் எப்படி நடவடிக்கை எடுப்பார்? ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை. எந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதும் இவரால் நடவடிக்கை எடுக்க முடியாது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்