பெரம்பலூர் அருகே கார் மோதி 4 பேர் படுகாயம்; கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

பெரம்பலூர் அருகே கார் மோதி 4 பேர் படுகாயம் அடைந்ததையடுத்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-10-30 23:00 GMT
பெரம்பலூர்,

திருச்சி மாவட்டம், துறையூர் உப்பிலியபுரத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கரண்ராஜ்(வயது 18). இவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கரண்ராஜ் நேற்று காலை தனது காரில் திட்டக்குடிக்கு சென்றார்.

அந்த கார் பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, வேப்பந்தட்டை தாலுகா பிரம்மதேசம் அருகே உள்ள வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் கிராமத்தில் இருந்து காளிராஜ்(62), இவரது மனைவி தனலட்சுமி(54) மற்றும் அதே ஊரை சேர்ந்த சரோஜா(43) ஆகிய 3 பேரும் வந்த மொபெட் எதிர்பாராதவிதமாக திடீரென்று பிரதான சாலைக்கு வந்ததால், காரை ஓட்டி வந்த கரண்ராஜ் நிலை தடுமாறி மொபெட் மீது மோதிவிட்டு, சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த எளம்பலூர் காந்தி நகரை சேர்ந்த கோபு என்பவரது மகளும், தனியார் கல்லூரி மாணவியுமான மேனகா(23) மீதும் மோதிவிட்டு சாலை ஓரத்தில் உள்ள வயற்காட்டிற்குள் பாய்ந்தது.

சாலை மறியல்

இந்த விபத்தில் மொபெட்டில் சென்ற காளிராஜ் உள்பட 3 பேரும், கல்லூரி மாணவி மேனகாவும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கரண்ராஜ் காயம் இன்றி உயிர் தப்பினார். இந்த நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள், எளம்பலூர் புறவழிச்சாலையை திருச்சி- சென்னை நான்கு வழிச்சாலையுடன் இணைக்கும் சர்வீஸ் சாலையில் அடிக்கடி விபத்துக்களும், அதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்துவருவதால், சர்வீஸ் சாலையை ஒரு வழிச்சாலையாக மாற்றக்கோரி எளம்பலூர்- இந்திராநகர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அவர்களுக்கு ஆதரவாக கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்