6-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் - நோயாளிகள் அவதி

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 6-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

Update: 2019-10-30 22:30 GMT
விக்கிரவாண்டி, 

அரசு டாக்டர்களுக்கு காலம் சார்ந்த ஊதியம் வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 25-ந் தேதி முதல் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக அரசு டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று 6-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, மேல்மலையனூர், திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்களில் பெரும்பாலானவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்சுந்தர் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு உதவி மருத்துவ அலுவலர்கள், தலைமை அரசு மருத்துவமனை டாக்டர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

தற்போது பருவமழை காலம் என்பதால் பொதுமக்கள் பலர் காய்ச்சல், இருமல், சளி தொல்லையால் அவதிப்பட்டு அதற்காக சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்கு அதிகளவில் வருகின்றனர். ஆனால் டாக்டர்களின் வேலை நிறுத்தம் காரணமாக புறநோயாளிகள் பிரிவு செயல்படாததால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற முடியாமல் வேறு வழியின்றி தனியார் மருத்துவமனையை நாடிச்செல்கின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகளில் வழக்கத்திற்கும் மாறாக நோயாளிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் அரசு மருத்துவமனை வார்டுகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை செவிலியர்களே கவனித்து வருகின்றனர். அதேநேரத்தில் தங்களால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதை கருதி உயிர் காக்கும் நோக்கில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பணியிலும், அறுவை சிகிச்சை பணியிலும் டாக்டர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் இவர்கள் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடையின்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டாக்டர்களின் போராட்டம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், டாக்டர்களின் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பயிற்சி டாக்டர்களை பயன்படுத்தி உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து மற்றும் அவசர சிகிச்சை பணியையும், உடனுக்குடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய பணியையும் டாக்டர்கள் தடையின்றி மேற்கொண்டு வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம், அதனால் உயிரிழப்பு ஏற்படாது என்ற நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டும் அறுவை சிகிச்சை செய்யும் பணி தடைபட்டுள்ளது. இந்த 6 நாட்களில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்