குமரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 72 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன அதிகாரி தகவல்

குமரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 72 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2019-10-31 22:00 GMT
நாகர்கோவில்,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் வசித்து வந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சன் எதிர்பாராத விதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் ஏற்பட கூடாது என்பதற்காக பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனே மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன.

இதே போல் குமரி மாவட்டத்திலும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின்பேரில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன. மேலும் பயன்படாமல் உபயோகமற்ற நிலையில் ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் காணப்பட்டால் உடனடியாக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04652-231077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.

மழைநீர் சேகரிப்பு

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நேற்று மாலை வரை 72 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் தரைமட்ட ஆழ்துளை கிணறுகள் இல்லை. அனைத்துமே ஒரு அடி அல்லது 2 அடி உயரத்தில் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. எனினும் அரசு உத்தரவுபடி பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூடி வருகிறோம். அந்த வகையில் ஊரக பகுதிகளில் 72 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன“ என்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சியை பொருத்த வரையில் தற்போது வரை 22 ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிக்க பயன்படுத்தி இருப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் “நாகர்கோவில் மாநகராட்சியில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளில் மழைநீர் சேகரிக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழுமூச்சாக நடைபெற்று வருகிறது. அதாவது ஆழ்துளை கிணற்றில் சல்லி கற்களை கொட்டி நிரப்பிவிடுவோம். பின்னர் அதில் மழைநீர் சுலபமாக செல்லும்படி வடிவமைத்து விடுவோம். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் தவறி விழுவதையும் தடுத்துவிடலாம். இந்த பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றன“ என்றார்.

மேலும் செய்திகள்