கொடுமுடி அருகே பரிதாபம்: 7 வயது சிறுமி லாரி மோதி சாவு

கொடுமுடி அருகே 7 வயது சிறுமி லாரி மோதி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2019-10-31 23:00 GMT
கொடுமுடி, 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தளுவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத். அவருடைய மனைவி முத்தழகு. இவர்கள் கட்டில் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் சரவணன் (வயது 8), மகள் நிதர்சனா(7). இதில் சரவணன் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். நிதர்சனா அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் சிறுமி நேற்று காலை 8.15 மணிக்கு வீட்டிற்கு எதிரே உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து ஈரோடு நோக்கி ஜல்லி பாரம் ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக நிதர்சனாவின் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தின் அடியில் சிக்கிய சிறுமி, உடல் நசுங்கி நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பித்து ஓடிவிட்டார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார். சிறுமியின் உடலை பார்த்து அவளது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்