பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் 7-வது நாளாக போராட்டம்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று டாக்டர்கள் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-31 22:30 GMT
நெல்லை, 

அனைத்து அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். காலமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அரசு டாக்டர்கள், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பணிகளை புறக்கணித்து தர்ணாபோராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கடந்த 3 நாட்களுக்கு முன்பிருந்து டாக்டர்கள் உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர். 7-வது நாளான நேற்றும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். டாக்டர்களுக்கு ஆதரவாக முதுநிலை மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், இளநிலை மாணவர்களும் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்கள் கார்த்திகேயன், பார்த்திபன், பால்ராஜ், சரவணகுமார், பிரவீன்குமார், நோபுள், ராஜேசுவரி உள்ளிட்ட டாக்டர்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, டாக்டர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் போடப்பட்டிருந்த போராட்ட சாமியானா பந்தலை போலீசார் அகற்றினர். இதையடுத்து டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவு முன்பு உள்ள ‘ஷெட்டில்’ அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டாக்டர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதில் ஒரு பகுதியாக நெல்லையை சேர்ந்த டாக்டர்கள் சிலருக்கு இடமாறுதல் மற்றும் விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால், அதனை அவர்கள் வாங்க மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் டீன் கண்ணன் நேற்று போராட்டம் நடந்த இடத்துக்கு வந்து, நீங்கள் அனுமதியின்றி போராடக்கூடாது. உடனே பணிக்கு திரும்புங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டதால் அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்