சங்கரன்கோவிலில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

சங்கரன்கோவிலில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-10-31 22:45 GMT
சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஏ.வி.ஆர்.எம்.வி. காலனியை சேர்ந்தவர் முனியசாமி (வயது 25). இவர் புளியங்குடி ரோட்டில் ஒர்க்‌ஷாப் கடை நடத்தி வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த முத்துமாரி (23) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் முத்துமாரி 3-வதாக கர்ப்பம் ஆனார். தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். முத்துமாரி அந்த பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கி இருந்தாராம். ஆனால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இதற்கிடையே நேற்றுமுன்தினம் முனியசாமி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது முத்துமாரி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முனியசாமி இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது முத்துமாரி தூக்கில் பிணமாக தொங்கினார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். முனியசாமிக்கும், முத்துமாரிக்கும் திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாராணவரே மேல் விசாரணை நடத்தி வருகின்றார்.

சங்கரன்கோவிலில் நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்