பாதையை சீரமைக்கக்கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

பள்ளி முன்பு உள்ள பாதையை சீரமைக்க வலியுறுத்தி திருப்பத்தூரில் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-31 22:00 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர்-மதுரை சாலையில் ஆறுமுகம் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் இந்த பள்ளியின் அருகில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த மழைநீரை வெளியேற்றுவதற்காக திருப்பத்தூர் பேரூராட்சி நிர்வாகத் தினர் இந்த பள்ளி நுழைவு வாயில் முன்பு பாதையில் வாய்க்கால் போன்று அமைத்து அந்த தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். அதன் பின்னர் கடந்த 2 நாட்களாக அந்த வாய்க்காலை மூடாமல் பேரூராட்சி நிர்வாகத்தினர் சென்றதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உள்ளே செல்ல முடியாமல் அவதிஅடைந்து வந்தனர்.

இன்னும் சில மாணவர்கள் சைக்கிளில் வந்து அதை உள்ளே கொண்டு செல்ல முடியாமல் அவதியடைந்தும், சில மாணவர்கள் அந்த வாய்க்காலில் தவறி விழுந்தும் சென்றனர். இதையடுத்து பள்ளி முன்பு தோண்டப்பட்ட இந்த வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று நேற்று காலை பள்ளி வகுப்பறையில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் பரமதயாளன், தாசில்தார் விஜயலெட்சுமி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி பணியாளர்கள் மூலம் தற்காலிகமாக அந்த பாதை சரி செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்