காற்றாலை மோசடி வழக்கு: சரிதா நாயர் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு

காற்றாலை அமைத்து தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2019-10-31 23:00 GMT
கோவை,

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள செங்கனூரை சேர்ந்தவர் சரிதா நாயர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்பட பல நகரங்களில் ‘சோலார் சிஸ்டம்ஸ்‘ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். இவர், கடந்த 2008-ம் ஆண்டு தனது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து கோவை வடவள்ளியில் உள்ள திருமுருகன் நகரில் ஐ.சி.எம்.எஸ். என்ற நிறுவனத்தை தொடங்கி, மானிய விலையில் காற்றாலை அமைத்து கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

அதை நம்பி ஊட்டியில் உள்ள தனியார் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜோத்சனா கிளியோசந்த் ரூ.6 லட்சமும், வடவள்ளி தனியார் மில்லின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் ரூ.26 லட்சமும் சரிதா நாயரின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அவர்களுக்கு காற்றாலை அமைத்து கொடுக்க வில்லை.

இது குறித்த புகாரின் பேரில் கடந்த 2009-ம் ஆண்டு கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் மற்றும் அந்த அலுவலக மேலாளர் ரவி ஆகியோரை கைது செய்தனர்.

இந்த மோசடி தொடர்பான வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக நேற்று காலையில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் கோர்ட்டுக்கு வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேரும் குற்றவாளி எனவும், தீர்ப்பு விவரம் மாலை 3.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி மாலையில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கண்ணன் தீர்ப்பு கூறினார். அத்துடன் அபராத தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த தவறினால் 3 பேரும் மேலும் தலா 9 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் தங்கராஜ் ஆஜராகி வாதாடினார். 

மேலும் செய்திகள்