மாவட்டத்தில் பலத்த மழை: தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது நிவாரணம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. ஆலங்குடி பகுதியில் பெய்த மழையில் தொழிலாளி ஒருவரின் வீடு இடிந்து விழுந்தது. அவருக்கு நிவாரணம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-10-31 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, மணமேல்குடி, திருமயம், அரிமளம், மீமிசல், ஆவுடையார்கோவில், அறந்தாங்கி இலுப்பூர், கீரனூர், உடையாளிப்பட்டி, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக புதுக்கோட்டையில் உள்ள சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி, வேளாண் விற்பனைக்குழு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதேபோல டி.வி.எஸ்.கார்னரில் உள்ள பகுதிகளில் சில வீடுகளில் மழைநீர் புகுந்தது.

தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உத்தரவின்படி, சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற மழைநீரை நகராட்சி பணியாளர்களை கொண்டு தண்ணீரை அப்புறப்படுத்தினார்கள். இதேபோல சாந்தநாதசுவாமி கோவிலுக்குள் புகுந்த மழைநீரையும் நகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினார்கள்.

மழையளவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் ஆதனக்கோட்டை 26, பெருங்களூர் 31.60, புதுக்கோட்டை 102, ஆலங்குடி 48.20, கந்தர்வகோட்டை 29, கறம்பக்குடி 37.80, மழையூர் 19.60, கீழாநிலை 46.40, திருமயம் 35.40, அரிமளம் 50.40, அறந்தாங்கி 111.20, ஆயிங்குடி 45.20, நாகுடி 39.80, மீமிசல் 54.60, ஆவுடையார்கோவில் 31.60, மணமேல்குடி 46.20, இலுப்பூர் 21, குடுமியான்மலை 44.80, அன்னவாசல் 32, விராலிமலை 22.20, உடையாளிப்பட்டி 75.40, கீரனூர் 18.40, பொன்னமராவதி 37.60, காரையூர் 20 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக அறந்தாங்கியில் 111.20 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக கீரனூரில் 18.40 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

ஆலங்குடி

ஆலங்குடி பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்துவின் மனைவி மணி என்பவரின் ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனால் தற்போது மணி வேறுவழியின்றி அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் வசித்து வருகிறார்.

எனவே வீடு சேதமடைந்து உள்ள மணிக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்