ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்புக்கு பயன்படுத்த நடவடிக்கை

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு அமைப்பாக மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2019-10-31 22:15 GMT
விருதுநகர்,

விருதுநகரில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் இருக்கும் பட்சத்தில் அதனை மழைநீர் சேமிப்பு அமைப்பாக மாற்றுவது அல்லது நிரந்தரமாக மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர்கள், வருவாய்த்துறை மண்டல அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் ஆகியோர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கும், அனைத்து மாணவர்களுக்கும், அங்கன்வாடி மையங்களில் பயிலும் மழலையர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்களுக்கு ஊராட்சி செயலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மழை பாதிப்புகளை குறைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் அந்தந்த காலத்தில் செய்யப்பட்டுள்ளனவா என உறுதி செய்திட வேண்டும். கண்காணிப்பு குழுக்கள் அவ்வப்போது நீர் நிலைகளையும், மழை சேதங்கள் குறித்தும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

மழைநீரை சேமிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் இருக்கும் பட்சத்தில் அதனை மழைநீர் சேமிப்பு அமைப்பாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனைத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர்கள், வருவாய்த்துறை மண்டல அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், கோட்டாட்சியர்கள் செல்லப்பா (அருப்புக்கோட்டை), காளிமுத்து (சாத்தூர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்