சிதம்பரத்தில் பரபரப்பு, சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து போலீஸ் நிலையத்திற்கு வந்த பெண் சிக்கினார் - கணவர் உள்பட 2 பேர் கைது

சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து சிதம்பரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர் சிக்கினார். மேலும் அவரது கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-31 22:30 GMT
சிதம்பரம், 

கடலுர் மாவட்டம் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த சிதம்பரம் மந்தக்கரை பகுதியை சேர்ந்த சக்கரபாணி என்பவரை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர் மீது வழக்குப்பதிந்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுபற்றி சக்கரபாணி தனது உறவினரான அதேபகுதியை சேர்ந்த ராஜதுரை மனைவி சூரியபிரியா(வயது 27) என்பவரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சூரியபிரியா போலீஸ் சீருடை அணிந்து கொண்டு நேற்று காலை சிதம்பரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்த போலீசாரிடம் தான் சென்னை நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதாகவும், மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த சக்கரபாணியின் மோட்டார் சைக்கிளை விடுவிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

அவர் மீது சந்தேகப்பட்ட போலீசார் நீலாங்கரை போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு சூரியபிரியா என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் யாராவது பணிபுரிகிறாரா? என்று விசாரித்தனர். அதில், சூரியபிரியா என்ற பெயரில் யாரும் பணிபுரியவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து சூரியபிரியாவிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். விசாரணையில், சூரியபிரியா போலீஸ் சீருடை அணிந்து தனது கணவர் ராஜதுரை, உறவினர் சக்கரபாணி ஆகியோருடன் சேர்ந்து போலீஸ் போல் நடித்து சிதம்பரம் பகுதி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறித்து பணம் பறித்ததும், சிலருக்கு அரசு அலுவலகங்களில் சாதி, வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த சூரியபிரியா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜதுரை, சக்கரபாணி ஆகியோரையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்