கமுதியில் பெய்த கனமழைக்கு, குண்டாற்றில் 17 ஆண்டுகளுக்குபின் வந்த வெள்ளம்; வீணாக கடலில் கலந்தது

கமுதியில் பெய்த கனமழைக்கு குண்டாற்றில் 17 ஆண்டுகளுக்கு பின் வந்த வெள்ளம் வீணாக கடலில் கலந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

Update: 2019-10-31 22:45 GMT
கமுதி,

கமுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் குண்டாறு, பரலையாறு வழியாக சென்ற மழை வெள்ளம் முறையான மராமத்து பணிகள் செய்யப்படாத காரணத்தால் 17 ஆண்டுகளுக்கு பின்பு குண்டாற்றில் வந்த மழை நீர் வீணாக கடலில் கலந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் விவசாயத்திற்கு தண்ணீர் பயன்படாமல் கடலில் கலந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளனர். 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை ஊருணி, கண்மாய்களில் தேக்கி வைக்க நடவடிக்கை எடுத்து மெத்தனப்போக்காக செயல்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கமுதி பேரூராட்சிக்குட்பட்ட செட்டியூருணியில் ஆக்கிரமிப்பு காரணமாக கமுதி கண்மாயில் இருந்து நீர் வரத்து தடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை எடுத்துக் கூறப்பட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. கமுதி செட்டியூருணியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால் 20 வருடத்திற்கு தண்ணீர் பிரச்சினை வராது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி செட்டியூருணியில் தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும், ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கலெக்டருக்கு கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு பொதுமக்களும் கையெழுத்திட்டு கோரிக்கை வைத்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்