பலத்த மழை: அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது - மாணவர்கள் கோவிலில் அமர்ந்து படிக்கும் அவலம்

பலத்த மழையால் அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதனால் மாணவர்கள் அருகில் உள்ள கோவிலில் அமர்ந்து பாடங்களை படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2019-10-31 22:00 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட சோழன் நகர் பகுதியில் நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 231 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் 1-ம் வகுப்பு முதல் 4 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின்போது திடீரென பெயர்ந்து கீழே விழுந்தன.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வந்தனர். அப்போது 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களின் நலன்கருதி அவர்களை அருகே உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமர வைத்து பாடம் நடத்தினர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பள்ளி வகுப்பறை கட்டிடம் சேதமடைந்து மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. பள்ளி நேரத்தில் அவை விழுந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடைபெற்று இருக்கும். தற்போது மாணவர்கள் அருகில் உள்ள கோவிலில் அமர்ந்து பாடங் களை படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மாணவ-மாணவிகள் நலன்கருதி சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதேஇடத்தில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்