வேலை நிறுத்த போராட்டம் 7-வது நாளாக நீடிப்பு: சேலத்தில் 2 டாக்டர்கள் இடமாற்றம்

சேலத்தில் 7-வது நாளாக அரசு டாக்டர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் 2 டாக்டர்கள் வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-10-31 23:00 GMT
சேலம்,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 7-வது நாளாக டாக்டர்களின் போராட்டம் நீடித்தது. இதனால் உள் நோயாளிகள் மற்றும் வெளிப்புற நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பாதிக்கப்பட்டது.

ஆனால் காய்ச்சல் வார்டு, விபத்து அவசர சிகிச்சை, தீவிர அறுவை சிகிச்சை பிரிவுகளில் மட்டுமே டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர். அரசு டாக்டர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் காலிபணியிடங்களாக அறிவித்து, புதிய டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தயாராக உள்ளோம்

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தமிழக அரசு எங்களை நீக்கிவிட்டு புதிய டாக்டர்களை நியமிப்பதாக கூறி உள்ளது. மேலும், பணி இடமாற்றம் செய்வதாகவும் மிரட்டுகிறது. அரசின் மிரட்டலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம். நாங்களே ராஜினாமா செய்வதற்கு தயாராக உள்ளோம். சேலத்தில் 7-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் 95 சதவீதம் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

அதேசமயம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ சங்கம் அங்கீகரிக்கப்படாத சங்கம் என்ற முதல்-அமைச்சரின் கருத்துக்கு அரசு டாக்டர்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். தற்போது அவசரமில்லாத அறுவை சிகிச்சை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக சட்டப்படி அரசின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளோம். எனவே, தமிழக அரசு உடனடியாக டாக்டர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து முடிவு எடுக்க வேண்டும், என்றனர்.

2 டாக்டர்கள் இடமாற்றம்

இதனிடையே, இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த டாக்டர் நந்தகுமார், வாழப்பாடி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த டாக்டர் வினோத்குமார் ஆகிய 2 பேர் வேறு மாவட்டத்திற்கு நேற்று இடமாற்றம் செய்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், சில டாக்டர்கள் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களின் விவரத்தை சேகரிக்கும் பணியில் சேலம் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுகாதாரத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்