இன்று முதல், குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் - உழவர்கரை நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

புதுவையில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று உழவர்கரை நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-10-31 22:00 GMT
புதுச்சேரி,

உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கந்தசாமி கலந்து கொண்டு குப்பைகளை எவ்வாறு தரம்பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள் மற்றும் அரியாங்குப்பம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் நாள்தோறும் சுமார் 170 டன் திடக்கழிவுகள் உருவாகிறது. இவை தனியார் நிறுவனம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து பெறப்படும் திடக்கழிவுகள் தற்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்படாமல் பெறப்படுகிறது.

வீட்டுக்கழிவுகளில் சராசரியாக 40 சதவீதம் மக்காத குப்பைகளாக உள்ளது. இதனால் குப்பைகளை மறுசுழற்சி செய்ய முடியாமல் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும். எனவே புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள் மற்றும் அரியாங்குப்பம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வருவோரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் குப்பைகளை தரம்பிரித்து வழங்க வேண்டும். திடக்கழிவுகள் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கும் குப்பைகள்: இறைச்சி, மீன், காய்கறிகள், உணவு பொருட்கள் மற்றும் தோட்டக்கழிவுகள். மக்காத குப்பைகள் (உலர் கழிவுகள்): பிளாஸ்டிக் கழிவுகள், ரப்பர், இரும்பு, தகரம், கண்ணாடி, பீங்கான் பொருட்கள். அபாயகரமான கழிவுகள்: நாப்கின்கள், டயர்கள், மருந்து பாட்டில்கள், ஊசிகள், பேட்டரிகள் போன்ற பொருட்கள்.

பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகள் தனித்தனியாக குரும்பாபேட்டில் உள்ள குப்பை கிடங்குகளில் கொட்டி வைக்கப்படும். பின்னர் மக்கும் குப்பைகளை வைத்து உரம் தயாரிக்கப்படும். மக்காத குப்பைகளை தரம்பிரித்து சாலை அமைத்தல் உள்பட பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

வணிக நிறுவனங்கள் குப்பைகளை சாலையிலோ, கழிவு நீர் வாய்க்காலிலோ கொட்டினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் வணிக உரிமமும் ரத்து செய்யப்படும். எனவே வணிக நிறுவனத்தினர் குப்பைகளை தரம்பிரித்து குப்பைகளை சேகரிக்க வருபவர்களிடம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்