தேசிய விருது பெற்ற அலுவலர்களுக்கு கலெக்டர் ஷில்பா பாராட்டு

நெல்லையில் தேசிய விருது பெற்ற அலுவலர்களை, மாவட்ட கலெக்டர் ஷில்பா பாராட்டினார்.

Update: 2019-11-01 21:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் திட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, ஒருங்கிணைந்த குழந்தைகள் உள்ளிட்ட துறைகளுக்கு தேசிய அளவிலான “ஸ்காட்ச்” விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. விருது பெற்ற அலுவலர்களை நேரில் அழைத்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பாராட்டினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இதில் மகளிர் திட்டம் மூலம் மானூர் பகுதியில் நகர நிதிகளையும், வசதிகளையும், கிராமப்புற பகுதியில் பயன்படுத்தி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் தடை செய்தல் மற்றும் பிளாஸ்டிகிற்கான மாற்று பொருட்களை மகளிர் சுயஉதவி குழு கொண்டு தயாரித்தல் ஆகிய இரு திட்ட செயல்களுக்கும் 2 விருதுகள் கிடைத்துள்ளது.

நரிக்குறவ இன மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அந்த இனத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளை கல்வி கற்க செய்ததற்காக குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கும், அங்கன்வாடி மையங்களில் ரத்த சோகையற்ற திட்டமான குழந்தைகளை வளர்த்து மற்றும் ஆடல் பாடல் வழியாக கல்வி கற்பிக்க செய்ததற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கும் என 4 விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

அந்த துறையை சேர்ந்த அலுவலர்களை பாராட்டுகிறேன். இதுபோல் மற்ற துறையை சேர்ந்த அலுவலர்களும் மத்திய அரசின் விருதுகளை பெற முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி, குழந்தைகள் நல அலுவலர் சந்திரகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயசூர்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்