பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 200 பேருக்கு பேரிடர் மீட்பு உபகரணங்கள் அமைச்சர்கள் வழங்கினர்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னார்வலர்கள் 200 பேருக்கு பேரிடர் மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Update: 2019-11-01 22:30 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை மாநகராட்சி மற்றும் சென்னையை ஒட்டி உள்ள திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தொற்றுநோய், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வருவாய், பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாநகராட்சியில் மழைநீர் வடிகால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள், நடைபெற்றுவரும் 210 நீர்நிலைகள் புனரமைப்பு பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சென்னையில் ரூ.445 கோடி மதிப்பீட்டில் 171 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால் பணிகளை வருகிற 30-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார். மாநகராட்சிக்குட்பட்ட நீர்வழி கால்வாய்களில் ‘ரொபோடிக்’ எந்திரம், நவீன தூர்வாரும் எந்திரங்கள் மூலம் 37 ஆயிரம் மெட்ரிக் டன் வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழைக்கால தொற்றுநோய்களை கட்டுப்படுத்திட மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்தார்.

வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர்களின்போது மீட்புபணியில் ஈடுபடுவது எப்படி? என்பது குறித்து 200 தன்னார்வலர்களுக்கு தமிழ்நாடு கமாண்டோ பள்ளி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பேரிடர் மீட்பு உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.வி.உதய குமார் ஆகியோர் வழங்கினர்.

அமைச்சர்களுக்கு, பெருநகர மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், மாநில பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் ‘காணொலி’ செயல்முறை மூலம் விரிவாக விளக்கி கூறினர்.

இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய் நிர்வாக கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக கமிஷனர் கா.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குனர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன், சென்னை கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி, தென்மண்டல வானிலை தலைவர் பாலச்சந்திரன் மற்றும் போலீஸ்துறை, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், பேரிடர் மேலாண்மை, கடலோர காவல் படை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்