குரோம்பேட்டையில், செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம் - சுஜித்தை மீட்க சரியாக முயற்சிக்கவில்லை என புகார்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க சரியாக முயற்சி எடுக்கவில்லை என கூறி குரோம்பேட்டையில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-01 23:15 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, நியூ காலனி, 12-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அரிகரன் (வயது 23). இவர், நேற்று மாலை குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் அருகே ஒரு வீட்டின் வளாகத்தில் உள்ள 100 அடி உயர செல்போன் கோபுரத்தில் திடீரென கருப்பு கொடியுடன் ஏறினார்.

பின்னர் அவர், “ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க அரசு சரியாக முயற்சிக்கவில்லை. மீண்டும் சுஜித் போன்று ஒரு உயிர் இழப்பு ஏற்படக்கூடாது. ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்தால் அவர்களை காப்பாற்ற உரிய கருவியை அரசு தயாரிக்க வேண்டும். திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர், தாம்பரம் உதவி கமிஷனர் அசோகன் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், செல்போன் கோபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரிகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அவரது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தார். அரிகரனை போலீசார் கைது செய்து குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்