ரவுடி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

ரவுடி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-11-01 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஆவடியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 22). இவர் கடந்த 2008-ம் ஆண்டு சென்னை அண்ணாநகரை சேர்ந்த பிரேம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பூபாலன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.

பிரேமின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக கடந்த 2010-ம் ஆண்டு நாராயணன் என்பவர் பூபாலனிடம் பேச்சு கொடுத்து அவரை பட்டாபிராம் அருகே உள்ள ஏரிக்கு அழைத்து சென்றார்.

அங்கு நாராயணன் தனது நண்பர்களான செல்வேந்திரன், மகேந்திரன், சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து பூபாலனை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்று விட்டார். இது குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. மாவட்ட கூடுதல் அரசு வக்கீல் மோகன்ராம் வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி தீப்தி அறிவுநிதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நாராயணன், செல்வேந்திரன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பட்டாபிராம் போலீசார் நாராயணன், செல்வேந்திரன் ஆகியோரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சுரேஷ் இறந்து விட்டதாலும் மகேந்திரன் மீது போதிய ஆதாரம் இல்லாததாலும் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்