சென்னை பெண் போலீஸ் ஏட்டுக்கு சொந்தமான 3 மாடி வீடு திடீரென இடிந்து தரைமட்டம் - ஓச்சேரி அருகே பரபரப்பு

ஓச்சேரி அருகே சென்னை பெண் போலீஸ் ஏட்டுக்கு சொந்தமான 3 மாடி வீடு நள்ளிரவில் திடீரென இடிந்து தரைமட்டமானது.

Update: 2019-11-02 22:30 GMT
பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டம் ஓச்சேரியிலிருந்து பனப்பாக்கம் செல்லும் வழியில் ஆயர்பாடி கிராமம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 68). விவசாயி. இவருக்கு அரங்கநாதன் (41), அசோக்குமார் (39) என்ற 2 மகன்களும், ராஜலட்சுமி (40) என்ற மகளும் உள்ளனர். இவர்களில் மகன்கள் 2 பேரும் ஆயர்பாடி கிராமத்திலேயே விவசாயம் செய்து வசித்து வருகின்றனர். மகள் ராஜலட்சுமி சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். அவர் சென்னை முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

ரங்கநாதன் தனக்கு சொந்தமான சொத்துகளை 2 மகன்களுக்கும், மகளுக்கும் பிரித்துக்கொடுத்துள்ளார். அவரிடம் மகள் ராஜலட்சுமி, ஆயர்பாடி கிராமத்திலேயே தனக்கு வழங்கிய சொத்தை விற்று வீடு கட்டி கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதன்படி ராஜலட்சுமிக்கு கொடுத்த நிலத்தை விற்று அவருக்கு ஆயர்பாடியிலிருந்து உத்திரம்பட்டு கிராமத்துக்கு செல்லும் வழியில் பழைய வீடு ஒன்றை தந்தை ரங்கநாதன் விலைக்கு வாங்கி கொடுத்தார்.

அந்த வீட்டை சீரமைத்து 3 மாடி கட்டிடமாக ராஜலட்சுமி மாற்றியுள்ளார். கீழ்தளத்தை உரக்கடைக்கு குடோனாக வாடகைக்கு விட்டுள்ளார். மேலே உள்ள 2 தளத்தில் திருச்சியை சேர்ந்த ஒருவரும், ஆயர்பாடியை சேர்ந்த நரேஷ் (23) என்பவரும் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நரேஷ் செல்போனில் ‘வாட்ஸ் அப்’பில் வந்த தகவலை பார்த்துக்கொண்டும், தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டும் இருந்தார். அப்போது 1 மணியளவில் திடீரென வீடு அதிர்வதுபோன்று இருந்ததை உணர்ந்த அவர் உடனடியாக கீழே இறங்கி வந்து பார்த்தார். அந்த நேரத்தில் 3 மாடி கட்டிடமும் தடதடவென இடிந்து தரைமட்டமானது. நல்ல வேளையாக நரேஷ் சற்று தொலைவில் நின்றதால் அவர் உயிர்தப்பினார். எனினும் அவருக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. அதேபோல் அங்கு வசித்து வந்த திருச்சியை சேர்ந்தவரும் சொந்த ஊருக்கு சென்றிருந்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த அவளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்றும் மீட்பு பணிகள் நடந்தன. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பகுதியில் கடந்த வியாழன் இரவு வரை மழை பெய்தது. அதனால் ஈரப்பதத்தால் சுவர் வலுவிழந்து இடிந்ததா? அல்லது பழைய வீட்டை புதுப்பித்து புதிதாக அதன் மீது கூடுதலாக மாடி எழுப்பப்பட்டபோது கான்கிரீட் சரியில்லாததால் விழுந்ததா? என்பது தெரியவில்லை. அது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்