சேலத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு 3 பேர் உயிர் தப்பினர்

சேலத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிர் தப்பினர்.

Update: 2019-11-02 23:00 GMT
சூரமங்கலம்,

சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). இவர் நேற்று மதியம் 12 மணியளவில் காரில் நண்பர் ஒருவருடன் மாமாங்கம் பகுதியில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை ராஜா என்பவர் ஓட்டினார். வழியில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் சென்றபோது காரின் என்ஜின் பகுதியில் புகை வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா காரை நிறுத்தினார். இதனிடையே காரின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. பின்னர் கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து வெங்கடேஷ், அவருடைய நண்பர், டிரைவர் ராஜா ஆகியோர் உடனடியாக காரில் இருந்து இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

போலீசார் விசாரணை

கார் தீப்பிடித்து எரிந்த பகுதியின் அருகே ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இதையொட்டி அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. காரில் இருந்து கரும்புகையும் வெளியேற தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கார் எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. இதைத்தொடர்ந்து சூரமங்கலம் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்