மாவட்டத்தில் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-11-02 22:30 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கந்தசஷ்டி விழாவையொட்டி சேலம் அம்மாபேட்டை மெயின்ரோட்டில் காளியம்மன் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகம், கணபதி ஹோமம், 36 முறை தொடர் பாராயணம் நடந்தது. அப்போது வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம் அபிஷேகம், மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பாலதண்டாயுதபாணி சாமிக்கு தங்க கவசம் சாற்றுதல், மணமக்களுக்கு நீர் கொண்டு வருதல், 10.30 மணி முதல் 12 மணி வரை பாலதண்டாயுதபாணி சாமிக்கு தெய்வானை, வள்ளியுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

சூரசம்ஹாரம்

அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று சாமிக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 6 மணிக்கு 36 முறை மகா கந்த சஷ்டி பாராயணம் நடந்தது. மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். கந்தசஷ்டி விழாவையொட்டி சேலம் பெரமனூர் கந்தசாமி கோவிலில் நேற்று காலை பாராயணம் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலையில் உள்ள முருகன் கோவிலிலும் கந்தசஷ்டி விழாவையொட்டி முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

பேர்லேண்ட்ஸ்

சேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் சேலம் உடையாப்பட்டி கந்தாசிரமத்தில் பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மாபேட்டை குமரகிரி பாலதண்டாயுதபாணி சாமி வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள ஆறுபடையப்பன் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திரளான பக்தர்கள் தரிசனம்

மகுடஞ்சாவடியில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. இதில் மகுடஞ்சாவடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து முருகனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தலைவாசல் அருகே வட சென்னிமலை பாலசுப்ரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்