பெங்களூருவில், முன்னாள் மந்திரி வைஜநாத் பட்டீல் மரணம் எடியூரப்பா, சித்தராமையா நேரில் அஞ்சலி

முன்னாள் மந்திரி வைஜநாத் பட்டீல் மரணம் அடைந்தார். முதல்-மந்திரி எடியூரப்பா, சித்தராமையா நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-11-02 22:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் 1984-ம் ஆண்டு முன்னாள் முதல்-மந்திரி ராமகிருஷ்ண ஹெக்டே மந்திரிசபையில் தோட்டக்கலைத்துறை மந்திரியாகவும், 1994-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த தேவேகவுடா மந்திரிசபையில் நகர வளர்ச்சித்துறை மந்திரியாகவும் பணியாற்றியவர் வைஜநாத் பட்டீல் (வயது 82).

கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று வைஜநாத் பட்டீல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு அவரது உடல் சொந்த ஊரான கலபுரகிக்கு எடுத்து செல்லப்பட்டது. மரணமடைந்த வைஜநாத் பட்டீலுக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

1938-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி பீதரில் பிறந்த அவர், கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தாலுகாவில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். கல்யாண கர்நாடக பகுதிக்கு அரசியல் சாசன சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி 20 ஆண்டுகள் போராட்டம் நடத்தியவர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஒரு முறை அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். நெருக்கடி காலத்தில் சிறையில் இருந்த அவர், மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்ணான்டசுக்கு மிக நெருக்கமானவர்.

முன்னாள் மந்திரி வைஜநாத் பட்டீல் மறைவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “கல்யாண கர்நாடக பகுதியின் முன்னேற்றத்திற்காக அரசியல் சாசன சிறப்பு அந்தஸ்து பெறுவதில் வைஜநாத் பட்டீல் முக்கிய பங்காற்றினார். அவர் எம்.எல்.ஏ.வாக, 2 முறை மந்திரியாக சிறப்பான முறையில் செயல்பட்டார். அவரது மறைவு மூலம் நாம் ஒரு நேர்மையான அரசியல்வாதியை இழந்துவிட்டோம்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்