தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.14 லட்சம் மோசடி ஒருவர் கைது; மேலும் 3 பேருக்கு வலைவீச்சு

கள்ளக்குறிச்சியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.14 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-11-02 23:00 GMT
விழுப்புரம்,

கள்ளக்குறிச்சியில் தியாக துருகம் செல்லும் சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதனை கள்ளக்குறிச்சி அருகே உள்ள விருகாவூரை சேர்ந்த குழந்தைவேல் (வயது 48), பண்ருட்டியை சேர்ந்த ஜெயிலாணி, கள்ளக்குறிச்சி செந்தில், விழுப்புரம் அஞ்சலிதேவி ஆகியோர் சேர்ந்து நடத்தி வந்தனர்.

இவர்கள் கள்ளக்குறிச்சி பகுதி மக்களை அணுகி தங்கள் நிதி நிறுவனத்தில் மாதந்தோறும் பணம் செலுத்தினால் 20 மாதங்கள் முடிவடைந்ததும் வட்டியுடன் சேர்த்து தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய பொதுமக்கள் சிலர் அந்த நிறுவனத்தில் மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர். 20 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பணம் கட்டியவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து உரிய தொகையை கொடுக்காமல் குழந்தைவேல் உள்பட 4 பேரும் காலம் தாழ்த்தி வந்தனர்.

பணம் மோசடி

பணம் கட்டியவர்கள், பலமுறை அவர்கள் 4 பேரிடம் சென்று பணத்தை திருப்பித்தரும்படி வற்புறுத்தி கேட்டனர். இருப்பினும் அவர்கள் 4 பேரும் சேர்ந்து பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

ஒருவர் கைது

அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தைவேல் உள்பட 4 பேரும் சேர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 30-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற குழந்தைவேலை நேற்று முன்தினம் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் ஜெயிலாணி, செந்தில், அஞ்சலிதேவி ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்