தமிழகத்தில் மழைநீரை சேமிக்க எந்த வழிமுறைகளையும் அரசு செய்யவில்லை கனிமொழி எம்.பி. பேட்டி

தமிழகத்தில் மழைநீரை சேமிக்க எந்த வழிமுறைகளையும் அரசு செய்யவில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2019-11-02 22:32 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற 3 விசைப்படகுகள், கொச்சியில் இருந்து தருவைகுளம் மீனவர்களுடன் சென்ற ஒரு விசைப்படகு ஆகியவை கடலில் மாயமானது. இதையடுத்து தருவைகுளத்தை சேர்ந்த மீனவ சங்கத்தினர் கனிமொழி எம்.பி., மாவட்ட நிர்வாகத்திடம் படகில் சென்ற மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். பின்னர் கடலோர காவல்படையினரின் தீவிர முயற்சியால் 3 படகுகளில் இருந்த மீனவர்கள் கரை திரும்பினார்கள். அதே நேரத்தில் மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் 9 பேரிடம் தொடர்பு கொண்டு லட்சத்தீவு அருகே உள்ள மினிக்காய் தீவு பகுதியில் கரை ஒதுங்க அறிவுறுத்தப்பட்டது.

மீனவர்களை மீட்பதற்கான முயற்சிகளை எடுத்த கனிமொழி எம்.பி.யை தருவைகுளத்தை சேர்ந்த மீனவ சங்கத்தினர் பலர் நேற்று காலையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் மீனவர்களின் குடும்பத்தினர் குறித்து கனிமொழி எம்.பி. விசாரித்தார்.

அதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தருவைகுளத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்ற போது திடீரென அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மீனவர்களை உடனடியாக மீட்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பின்னர் மாவட்ட கலெக்டர் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு தொடர்பு கொண்டு கடலோர காவல்படையினர் மூலம் மீனவர்களை மீட்க கோரிக்கை விடுத்தேன். தற்போது மீனவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். மீனவர்களை மீட்க உதவிய அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த சில நாட்களாக தூத்துக்குடியில் மழை பெய்துள்ளது. ஆனால் மழை நீர் சேமிக்கப்படவில்லை. பல இடங்களில் தூர்வாருகிறோம் என்ற அறிவிப்பு தான் வந்துள்ளது. ஆனால் அதற்கான பணிகள் சரியாக நடக்கவில்லை. முக்கியமாக மழை நீர் குளங்களுக்கு சேர அமைக்கப்பட்ட வழிபாதைகள் சரியாக செப்பணிடப்படவில்லை. தூத்துக்குடியில் மட்டும் இல்லை, தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை நீரை சேமிக்க எந்த வழிமுறைகளையும் அரசு செய்யவில்லை. இவ்வளவு தண்ணீர் பிரச்சினையை சந்தித்த பிறகும் சரியாக தூர்வாராமல் தண்ணீரை வீணாக்கி இருப்பது இந்த அரசு மக்களுக்கு செய்திருக்க கூடிய துரோகம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்