வெள்ளப்பெருக்கு குறைந்ததால் திற்பரப்பு அருவியில் 6 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் திற்பரப்பு அருவியில் 6 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Update: 2019-11-03 23:00 GMT
நாகர்கோவில்,

அரபிக்கடலில் உருவான மகா புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. வயல்கள், வாழை மற்றும் ரப்பர் தோட்டங்களிலும் தண்ணீர் புகுந்ததால் ஏக்கர் கணக்கில் வாழைகளும், நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் குடியிருப்புகள் மற்றும் வயல்வெளிகளில் புகுந்த தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக வடிய தொடங்கியது. பல இடங்களில் தண்ணீர் முழுமையாக வடிந்து விட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசாக தூறல் விழுந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. அதோடு காலை 11 மணி வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை அளவு

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த இந்த மழை அதிகபட்சமாக கொட்டாரத்தில் 20 மில்லி மீட்டர் பதிவானது. இதே போல மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

நாகர்கோவில்–10.6, பூதப்பாண்டி–6.2, களியல்–2.7, கன்னிமார்–1.4, குழித்துறை–4.6, மயிலாடி–7.4, சுருளோடு–16, தக்கலை–7.2, மாம்பழத்துறையாறு–16, குருந்தன்கோடு–6.2, முள்ளங்கினாவிளை–2, ஆனைகிடங்கு–19.4, முக்கடல்–10.6 என்ற அளவில் மழை பெய்தது.

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

குமரி மாவட்டத்தில் மழை குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அதாவது நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணைக்கு 867 கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று நீர்வரத்து குறைந்து 515 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல 1667 கனஅடி தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 683 கனஅடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 16 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 52 கனஅடியும், முக்கடல் அணைக்கு 6 கனஅடியும் தண்ணீர் வந்தது.

அதே சமயத்தில் பெருஞ்சாணி அணையில் இருந்து 676 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 52 கனஅடியும் தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்ததால் 6 நாட்களுக்கு பிறகு அங்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் நேற்று அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.

மேலும் செய்திகள்