செஞ்சி அருகே, வராகநதி கால்வாயில் உடைப்பு - தண்ணீர் வீணாக வெளியேறுவதால் விவசாயிகள் கவலை

செஞ்சி அருகே வராகநதி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2019-11-03 21:30 GMT
செஞ்சி, 

செஞ்சி அடுத்த செவலபுரை அருகே வராகநதியின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வராகநதி கால்வாய் மூலம் ஆனாங்கூர், அவியூர், மேல்களவாய், நெகனூர், கொரவணந்தல், களையூர், வடபுத்தூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏரிகளுக்கு செல்கிறது. மேலும் அணைக்கட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரியில் இருந்து ஓடை வழியாக வரும் உபரிநீர், வராகநதி கால்வாயில் கலக்கும் இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான தடுப்பணை கட்டப்பட்டது.

மேலும் கால்வாயின் கரைகள் சீரமைக்கப்பட்டு, சிமெண்டு தளம் அமைக்கப்பட்டதால் அனைத்து ஏரிகளுக்கும் தடையின்றி தண்ணீர் சென்றது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வராகநதி கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் ஓடையில் இருந்து வராகநதி கால்வாயில் தண்ணீர் கலக்கும் இடத்தின் அருகில் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதன் காரணமாக மேற்கண்ட பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட வரவில்லை. அதனால் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்