காதலித்து பெற்றோர் சம்மதத்துடன்: நெதர்லாந்து வாலிபரை கரம்பிடித்த மைசூரு இளம்பெண் - இந்து முறைப்படி திருமணம் நடந்தது

காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் நெதர்லாந்து நாட்டு வாலிபரை மைசூருவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நேற்று மைசூருவில் கோலாகலமாக நடந்தது.

Update: 2019-11-03 21:02 GMT
மைசூரு,

மைசூருவைச் சேர்ந்தவர் ராமரவீந்திரா. இவரது மனைவி சுமனா. இவர்கள் இருவரும் வக்கீல்கள் ஆவர். இவர்களது மகள் அனு(வயது 25). இவர் நெதர்லாந்து நாட்டில் வக்கீலுக்கு(எல்.எல்.எம்.) படித்து வந்தார். அப்போது அவருக்கு தன்னுடன் படித்த ரெனே யான் போர்கெட்(25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகி வந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர்.

முதலில் ரெனே யான் தனது காதலை அனுவிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அனுவும் சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. ரெனே யான் வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். ஆனால் அனுவின் பெற்றோர் வெவ்வேறு நாடு, மொழி, மதம், இனம், ஜாதி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து யோசித்து வந்தனர்.

இருப்பினும் அனு தனது காதலில் உறுதியாக இருந்தார். இதையடுத்து அனுவின் பெற்றோரும் அவருடைய காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். அதையடுத்து இவர்களது திருமணம் பற்றி இருவீட்டாரும் கலந்து பேசி முடிவு செய்தனர். அப்போது ரெனே யானும், அவருடைய குடும்பத்தினரும் இந்தியாவில், இந்து முறைப்படி திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்பேரில் அனு-ரெனே யானின் திருமணம் மைசூருவில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி நேற்று மைசூருவில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அனு மற்றும் ரெனே யானின் திருமணம் இந்து முறைப்படியும், லிங்காயத் சமுதாயத்தின் சம்பிரதாயப்படியும் கோலாகலமாக நடந்தது. புரோகிதர் மந்திரங்கள் ஓத அனுவின் கழுத்தில் ரெனே யான் தாலி கட்டினார். பின்னர் அவருடைய நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து, காலில் மெட்டி அணிவித்தார்.

இதில் அனுவின் குடும்பத்தினர், ரெனே யானின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், போலந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்த அனு-ரெனே யானின் நண்பர்களும் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவரும் தடபுடலாக ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்த விருந்தை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்