மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம்: எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது - சஞ்சய் ராவத் எம்.பி. குற்றச்சாட்டு

எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-11-03 21:45 GMT
மும்பை,

மராட்டியதில் பாரதீய ஜனதா, சிவசேனா இடையேயான முதல்-மந்திரி பதவி போட்டியால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

சிவசேனா கட்சி பாரதீய ஜனதாவை கழட்டி விட்டுவிட்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க் களின் ஆதரவை பெற அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

பதவியேற்பு நிகழ்ச்சிக்காக வான்கடே மைதானம் மற்றும் மகாலட்சுமி குதிரை பந்தைய மைதானம் ஆகியவற்றில் விருந்தினர் இல்லங்கள் பதிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் பாரதீய ஜனதா ஏன் இன்னும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை?

மும்பை தாதரில் உள்ள சிவாஜி மைதானத்தில் சிவசேனா முதல்-மந்திரி பதவி ஏற்பார். எங்கள் கட்சிக்கு 170-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கும். ஆட்சி அமைப்பதற்கான கருவி எங்கள் கைகளில் தான் இருக்கிறது. பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் அமர்ந்து பேசினால் இந்த பிரச்சினை தீர்க்கப்படலாம். ஆனால் அமித்ஷாவின் அமைதி மர்மமாக உள்ளது.

மராட்டிய தேர்தல் முடிவுக்கு பின்பு அவர் மாநிலத்தின் மீது கவனம் செலுத்தவில்லை.

முதல்-மந்திரி பதவி குறித்து மட்டுமே இனி பேச்சுவார்த்தை நடைபெறும். அது நடக்கவில்லை என்றால் சிவசேனாவிடமே முதல்-மந்திரி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்