கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியது விவசாயிகள் சிறப்பு வழிபாடு

கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியது. இதையொட்டி விவசாயிகள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

Update: 2019-11-03 23:00 GMT
கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74-கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வலசக்கல்பட்டியில் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. கெங்கவல்லி பேரூராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் வசதி கிடைத்து வருகிறது. கெங்கவல்லி பகுதியில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்தது. இதைத்தொடர்ந்து வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியது.

இதையடுத்து நேற்று காலை அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கிடா வெட்டி சாமி கும்பிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். அப்போது விவசாயிகள் கூறும்போது, இன்னும் ஒரு ஆண்டுக்கு விவசாயம் செய்ய தண்ணீர் பிரச்சினை இருக்காது கெங்கவல்லி பேரூராட்சி, 74-கிருஷ்ணாபுரம் ஊராட்சி, கூடமலை ஊராட்சி ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருக்காது, என்றனர்.

குளிக்க தடை

இந்த ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிப்பதால் இதை பார்த்து ரசிக்க பொதுமக்கள் வருகிறார்கள். ஆனால் கடந்த ஒரு ஆண்டில் வெவ்வேறு சம்பவங்களில் இந்த ஏரியில் மூழ்கி 4 பேர் பலியாகி உள்ளதால் ஏரியில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

வலசக்கல்பட்டி ஏரியை வருவாய்த்துறையும், பொதுப்பணித்துறையும் சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஏரியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் செய்திகள்