விழுப்புரம், கலெக்டர் அலுவலகத்தை அரசுப்பணியாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-04 22:30 GMT
விழுப்புரம்,

தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், ஊராட்சி களப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்கள், மேல்நிலைநீர்தேக்கதொட்டி இயக்குபவர்கள், டாஸ்மாக் பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள், பேரூராட்சி, காவல்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்துறை ஆகிய துறைகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அரசு பணியாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி அரசுப்பணியாளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத்தலைவர் சிவக்குமார் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் நேற்று காலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் கோ‌ஷமிட்டனர். இதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்