நிலத்தை மீட்டு தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை மிரட்டல்

நிலத்தை மீட்டு தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி அ.தி.மு.க. பிரமுகர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

Update: 2019-11-04 23:15 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் குமாரதுரை (வயது 42). அ.தி.மு.க. பிரமுகரான இவர், நேற்று மாலை கீரமங்கலம் பஸ் நிலையம் அருகில் உள்ள பயன்பாடு இல்லாத தனியார் செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு ஏறினார். அங்கிருந்து எனது நிலத்தை வனத்துறை கையகப்படுத்தியுள்ளது. அந்த நிலத்தை மீட்டுக் கொடுத்தால் தான் கீழே இறங்குவேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

நிலத்தை மீட்டு...

செல்போன் கோபுரத்தின் மேல் ஒருவர் நிற்பதைப் பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குமாரதுரையை கீழே இறங்குமாறு கூறினார்கள். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்து தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தார்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மேலே ஏறி மீட்க முயற்சி செய்த போது, அவர் கீழே குதிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் போலீசாரும், தீயணைப்பு படையினரும், பொதுமக்களும் சமாதானமாக பேசி குமாரதுரையை கீழே இறங்க சொன்னார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு குமாரதுரை கீழே இறங்கி வந்தார். உடனடியாக அவரை தீயணைப்பு வீரர்கள் கீரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது குமாரதுரை கூறுகையில், எங்கள் குடும்பத்திற்கு சுமார் 3 ஏக்கர் நிலம் வனத்துறையின் முந்திரிக்காட்டில் உள்ளது.

அந்த நிலத்தை வனத்துறையினர் எங்களிடம் கொடுக்காமல் பயன்படுத்தி வருகின்றனர். அதனை மீட்டுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன், ஆனால் நடவடிக்கை இல்லை. அதனால் செல்போன் கோபுரத்தில் ஏறினேன் என்று கூறினார். தொடர்ந்து போலீசார் குமாரதுரையை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்