விழுப்புரம் அருகே, 6 வயது மகளுடன் நர்சு, கிணற்றில் குதித்து தற்கொலை - கணவர் இறந்த சோகத்தில் துயர முடிவு

விழுப்புரம் அருகே கணவர் இறந்த சோகத்தில், 6 வயது மகளை மடியில் கட்டிக்கொண்டு நர்சு, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-11-04 23:15 GMT
செஞ்சி,

விழுப்புரம் அருகே உள்ள நேமூரை சேர்ந்தவர் நடராஜன் மகள் சரசு (வயது 33). இவருக்கும் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் வைஷாலி என்ற மகள் உண்டு. சரசு திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் கார்த்திகேயனும் அங்குள்ள தனியார் கார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த மாதம் கார்த்திகேயன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் சரசு தனது குழந்தையுடன் பெற்றோர் ஊரான நேமூருக்கு வந்தார். அங்கு வந்ததில் இருந்து அவர் வேலைக்கு செல்லவில்லை. இறந்து போன கணவரின் ஞாபகமாகவே இருந்து வந்த சரசு நேற்று காலையில் வீட்டுக்கு பின்னால் உள்ள ஒரு விவசாய கிணற்றுக்கு சென்றார். அங்கு அவர் தனது மகள் வைஷாலியை மடியில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக செத்தனர்.

இந்த நிலையில் வீட்டில் மகளையும் பேத்தியையும் காணாமல் திடுக்கிட்ட நடராஜன், இருவரையும் தேடி பின்னால் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு கிணற்றின் கரையில் செல்போனும், செருப்பும் கிடந்ததை கண்ட அவர் கிணற்றில் எட்டிப்பார்த்த போது, இருவரின் உடலும் மிதப்பதை கண்டு சோகம் தாளாமல் கதறி அழுதார். இச்சம்பவம் பற்றி கஞ்சனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேமூருக்கு விரைந்து வந்த போலீசார், தகவல் தெரிவித்ததன் பேரில் விழுப்புரம் தீயணைப்புப்படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி பிணமாக மிதந்த சரசுவையும், அவரது குழந்தையையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதன்பிறகு இருவரது உடலும் பிரேதபரிசோதனைக்காக முன்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் இறந்த துக்கம் தாளாமல் குழந்தையுடன் நர்சு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்